பாலியல் அத்து மீறல் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் உலகில் அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது.
அண்மையில் இலங்கையில் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் மீது பிரயோகிக்கப்பட்ட பாலியல் வன்முறைகளைத் தொடர்ந்து, இலங்கையின் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்படும் வைத்தியசாலை ஒன்றில் சிகிட்சைபெற்று வந்த பெண் நோயாளிமீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டிருந்தது. மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானதாகவும் தொடர் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் பங்களாதேஷ் நாட்டில் எட்டு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ள செய்தியொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 05ஆம் திகதி இரவு நேரத்தில், மகுரா நகரில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்குச் சென்றபோது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கொடுத்த புகாருக்கு அமைவாக மூத்த சகோதரியின் 18 வயது கணவர், அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒருங்கிணைந்த இராணுவ மருத்துவமனையில் மார்ச் 8 ஆம் திகதி ஆபத்தான நிலையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆறு நாட்கள் சிகிட்சையிலிருந்து, கடந்த வியழக்கிழமையன்று மூன்று மாரடைப்புக்கள் ஏற்பட்ட காரணத்தால் சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், கோபமடைந்த ஒரு கும்பல் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் வீட்டைத் தாக்கி, தீ வைத்துள்ளது.
” என் மகள் உயிர் பிழைப்பாள் என்று நினைத்தேன். அவள் அதைச் செய்திருந்தால், நான் அவளை இனி எங்கும் தனியாக சென்றிருக்க விட்டிருக்க மாட்டேன்” என குறித்த சிறுமியின் தாய் தெரிவித்த கருத்துக்கள் அனைவரையும் சோகத்திலாழ்த்தியுள்ள நிலையில், கடுமையான எதிர்ப்புகளின் மத்தியில் சிறுமியின் உடல் ஒரு இராணுவ ஹெலிகாப்டரில் மகுரா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுச் சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதிச் சடங்குகள் இடம்பெற்றிருந்தன.
குறித்த பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திற்கெதிராக பல எதிர்ப்பலைகள் தோன்றியுள்ள நிலையில் வன்புணர்வுக்கு ஆளானவர்களுக்கு நீதியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான சீர்திருத்தச் சட்டங்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகுராவில் குறித்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள், பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் ஒரே வயதினரைச் சேர்ந்த குறைந்தது மூன்று குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, பங்களாதேஷில் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்வது மரண தண்டனைக்குரியதாக சட்டமியற்றப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com