அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு 50,000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பழுதடைந்த பழ விற்பனை தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் நேற்று மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட சில பழ விற்பனை நிலையங்கள் யாவும் திடீர் பரிசோதனை செய்யப்பட்டன.
இதன்போது, பழுதடைந்த பழங்களை விற்பனை செய்த கடை அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்த போது பல பழுதடைந்த பழங்கள் மீட்கப்பட்டன.
மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத சில பொருட்களையும் சேர்த்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக சமர்ப்பித்த வேளை 5 விற்பனை நிலையங்களுக்கு தலா 20,000 ரூபா – இரண்டு கடைகளுக்கு 10,000 ரூபா – இரண்டு கடைகளுக்கு ரூபா 5,000 என மொத்தமாக 50,000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அத்துடன், பொதுமக்கள் தங்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விழிப்பாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Link : https://namathulk.com