அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் நிலவிய மழையுடனான வானிலையால், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது.
எனினும் தற்போது காலநிலை சீராமைந்துள்ளமையினால், மீண்டும் பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர், அம்பாறை, இறக்காமம், மத்திய முகாம் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மை விவசாயிகளினால் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன் அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்களை விட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், அரிசி ஆலை உரிமையாளர்களுமே அதிகளவில் நெல்லினை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்து வருகின்றனர்.
இப்பெரும் போக வேளாண்மைச் செய்கை காலநிலை மாற்றம் விலைவாசி காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக, அறுவடை இயந்திரங்கள் வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஷ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும், அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும் கவலையினை தெரிவித்தனர்.
இது தவிர அண்மையில் பெய்த மழை மற்றும் காட்டு யானைகளின் வரவினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Link : https://namathulk.com