சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது பற்றிய பேச்சுக்களே அண்மைய நாள்வரையிலும் பேசுபொருளாய் மாறியிருந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை பூமியை வந்தடைந்தார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமியை வந்தடைந்த நிகழ்வைக் காண பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தார்கள்.
இவரின் தந்தையான தீபக் பாண்டியா குஜராத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு அமெரிக்க விஞ்ஞானி. ஸ்லோவேனியாவைச் சேர்ந்த உர்சுலின் போனிக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில்
1965இல் பிறந்த மூன்றாவது மகள்தான் சுனிதா. அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக் கல்வியையும் புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசையுடன் இருந்தார்..
அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998இல் நாசா தன்னோடு இணைத்துக் கொண்டது. விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்ட இவர், விண்வெளியில் அதிக நேரம் விண்வெளிநடை மேற்கொண்டு சாதனை புரிந்ததோடு சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சாதனைகளைப் படைத்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மீண்டும் பூமிக்குத் திரும்பும் சந்தர்ப்பம் எதுவென்று தெரியாத நிலையில், 286 நாட்களாகத் தங்கியிருந்தார் சுனிதா வில்லியம்ஸ். தற்போது இவர் பூமிக்குத் திரும்பியுள்ள நிலையில் இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலமானது புளோரிடா மாகாணத்திற்கு அருகில் கடலில் இறங்கி மிதந்தது.
இந்தவகையில் இந்தியாவைக் குறிக்கும் விதமாக சமோசாவையும் ஸ்லோவேனியாவைச் சுட்டும் வகையில் அந்த நாட்டுக் கொடியையும் விண்வெளிக்கு சுனிதா எடுத்துச் சென்றிருந்தமை அனைவராலும் பரவலாகப் பேசப்பட்டிருந்தது. டிசம்பர் 9, 2006இல் பணிக்குழு 14இன் உறுப்பினராக விண்வெளிக்குச் சென்று விண்வெளி நிலையத்தில் சேர்ந்தார். பூமிக்குத் திரும்பாமல் அடுத்த பணிக்குழு 15இலும் நீடித்து மொத்தம் 192 நாள்கள் விண்வெளியில் பணியாற்றி 2007 ஜூன் 22இல் பூமிக்குத் திரும்பினார்.
மீண்டும் இரண்டாவது முறையாக பணிக்குழு 32இன் ஒரு பகுதியாக 2012 ஜூலை 15இல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் செய்த சுனிதா, மீண்டும் அடுத்த பணிக்குழு 33இலும் இணைந்து 2012 நவம்பர் 19 அன்று பூமிக்குத் திரும்பினார். 59 வயதான சுனிதா, போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் விண்கலங்களை ஓட்டும் பயிற்சியைப் பெற்று, ஸ்டார்லைனர் விண்கலத்தைச் சோதனையோட்டம் செய்ய மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 2024இல் விண்வெளிக்குச் சென்றார்.
சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் ஷட்டில், சோயூஸ், போயிங் ஸ்டார்லைனர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஆகிய நான்கு வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றிருப்பதோடு எதிர்காலத்தில் நீண்ட நாள்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டால் விண்வெளியில் பயிர்த் தொழில் செய்து உணவை உற்பத்தி செய்ய முடியுமா என ஆய்வு செய்ய லெட்யுஸ் எனப்படும் கீரைச் செடியை வளர்த்து ஈர்ப்பு விசையின் இழுவை அற்ற விண்வெளியில் தாவர வளர்ச்சி குறித்து ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
மேலும் சூடான உணவிலிருந்தும் வியர்வை மூலம் ஆவியாகும் நீரைப் பிரித்து எடுக்க வடிவமைத்த புதிய கருவியை பரிசோதனை செய்துபார்த்தார். ரோடியம் உயிரி உற்பத்திப் பரிசோதனையில் விண்வெளி நிலையத்தில் ஈஸ்ட் போன்ற பாக்டீரியா வளர்ச்சி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கு கொண்ட இவர் விண்வெளி நிலையத்தின் உள்ளே சுவர்களில் வாழும் நுண்ணுயிரிகளை இனம் கண்டு சோதனை செய்திருந்தார். ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உணவில் உள்ள விட்டமின்கள் போன்ற ஊட்டச் சத்துகளைத் தயாரிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இப்படிச் சிறிதும் பெரிதுமாக 150ற்கும் மேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பப் பரிசோதனைகளில் சுமார் 900 மணி நேர ஆராய்ச்சிகளை இவர். மேற்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 09 மாதங்களாகத் தங்கியிருந்து இன்றையதினமே பூமியை அடைந்திருக்கிறார்கள். இவர்களை விரைவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவார்கள்.
நீண்ட கால விண்வெளி பயணங்கள் உடலை பாதிக்கின்றன என்பதால் உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம், எனவே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் உடலும் புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழக அவர்களுக்கு விரிவான உடற்பயிற்சி முறை வழங்கப்படும்.
விண்வெளியிலிருந்து மண் தொட்ட விண்வெளித் தேவதை சுனிதா வில்லியம்ஸ், கடலில் மிதந்த விண்கலத்தில் இருந்து வெளியே வந்த நேரத்தில் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
Link : https://namathulk.com