இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் எலிஸ்கா சிகோவா அவர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான செக் குடியரசின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் இதன்போது பாராட்டினார்.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், ஜனநாயக ஆட்சி முறைக்கான புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இரண்டு அமைதியான தேர்தல்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியமைக்கு தூதுவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
தூதுவர் சிகோவா இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒப்பந்தங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தனது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே விஞ்ஞானம் மற்றும் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கல்வி பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் அறிவு பரிமாற்ற திட்டங்களைச் சேர்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சூழல் பாதுகாப்பு மற்றும் நகர நிலைபேற்றுத்தன்மைக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமான க்ளீன் சிறிலங்கா திட்டம் குறித்து தூதுவருக்கு பிரதமர் விளக்கமளித்தார்.
இலங்கையின் கலாசார பாரம்பரியம், இயற்கை சூழல் மற்றும் சுற்றுலா சூழல் முறைமைகளை அனுபவிக்க செக் நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Link : https://namathulk.com